மூலிகை மந்திரம் அவரை

சுவை மிக்க காய்கறிகளில் ஒன்று அவரை என்பது அனைவரும் அறிந்ததுதான். அதன்  மருத்துவ சக்தியை உணர்ந்துதான் நோயுற்ற காலங்களில் பத்திய உணவாகவும் நம் முன்னோர் பயன்படுத்தி வந்தனர்.  கொடி வகையைச் சேர்ந்த தாவரமான அவரை, தென்னிந்தியாவைப் பொறுத்தவரை உணவுக்கென வீட்டிலும்  வளர்க்கப்படும் பெருமைக்குரியது.

பெரும்பாலும் ஆடி மாதத்தில் விதைக்கப்படும் அவரை, சுமார் 6 மாத காலத்தில் (அதாவது, மார்கழி, தை மாத  காலங்களில்) கொத்துக் கொத்தான காய்களுடன் வெள்ளை மற்றும் நீலநிறப் பூக்களும் கொண்டு அழகான தோற்றத்துடன் வளர்ந்திருக்கும்.

நாம் சமையலில் அதிகமாகப் பயன்படுத்துவது கொடி அவரை என்பது குறிப்பிடத்தக்கது. Indian butter bean  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அவரையின் தாவரப்பெயர் Lablab purpureus என்பது ஆகும்.

அவரையில் அடங்கியுள்ள மருத்துவப் பொருட்கள் உடலுக்கு ஊட்டச்சத்தாகவும் மருந்தாகவும் பயன்தரும் பொருட்கள்  அவரையில் நிறைந்துள்ளன. ஒரு கப் அளவுள்ள அவரையில் புரதச்சத்து 12.9 கிராம், நீர்ச்சத்து 122 கிராம், சாம்பல் சத்து  1.4 கிராம், நார்ச்சத்து 9.2 கிராம், கொழுப்புச்சத்துகள் 1.2 கிராம்,  எரிசக்தியான கார்போஹைட்ரேட் 569 கலோரி அடங்கியுள்ளது. இதனுடன் நார்ச்சத்து, சர்க்கரைச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி,  ரிபோஃப்ளேவின், நியாசின், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செம்புச்சத்து,  செலினியம், சோடியம், கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3, ஒமேகா 6  ஆகியனவும் மிகுதியாக அடங்கியுள்ளன.

இரவிலும் உண்ணத் தகுந்த, வாத, பித்த, சிலேத்தும நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  ஏற்ற, ஆறாப் புண்ணுடையோர்க்கு அருமருந்தாக விளங்குகிற, அடங்காக் காய்ச்சல் உற்றோர்க்கும், கண்ணின் விழிக்குள்  ஏற்படும் நோய்களுக்கும் ஏற்ற பத்திய உணவாக விளங்குவது அவரையாகும். மருந்துண்ணும் காலத்தும், உடல் தேற்றும்  காலத்தும் உண்ணுவதற்கேற்ற மிகச்சிறந்த மருந்து.

ஆச்சரியம் தரும் அவரையின் பயன்கள்

ஒரு கப் அவரையில் நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவையான Folate எனும் வைட்டமின்சத்து 44% உள்ளது. இந்த  Folate சத்துதான் மரபணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச்சிக்கும், அமினோ அமிலங்களின் தயாரிப்புக்கும் உதவுகிறது. கருவில் வளர்கிற குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தினை தருவதற்கு Folate அவசியம்  என்பதை மருத்துவர்கள் அறிவார்கள். இதனால் கரு உருவாவதற்கு முன்போ, கருவுற்ற பின்போ தாய்மார்கள் அவரைப்  பிஞ்சினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். 

குறைப் பிரசவம், குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும்  குறைபாடுகள் போன்றவற்றை இதனால் வராமல் தடுக்க முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கும் ஆரோக்கியம் தரும்  உணவு அவரை என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். Folate சத்து நிறைந்திருப்பதைப் போலவே, நாள்  ஒன்றுக்கு நமக்குத் தேவைப்படும் இரும்புச்சத்திலும் 33% அளவு ஒரு கப் அவரையில் இருக்கிறது. 

இதனுடன் உடல் முழுவதும் பிராண வாயுவைக் கொண்டு செல்லும் பணிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி தரவும், உடல்  உஷ்ணம் பெருக்கவும், மூளையினின்று செல்லும் மின் சமிக்ஞைகளை சீராகச் செலுத்தவும் அவரை முக்கிய காரணியாக  விளங்குகிறது என்று கூறினால் அது மிகையில்லை. மேலும், அவரையில் உள்ள இரும்புச்சத்துகள் ரத்த சிவப்பு  அணுக்கள் உருவாகவும் பெரும் உதவி செய்கிறது. 

நுண் கிருமிகளை அழிக்கும் பணிக்கு உதவும் ரத்த வெள்ளை அணுக்களுக்குப்  புத்துணர்வு தருவதாகவும் இரும்புச்சத்து விளங்குகிறது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. உடல் சீராக  இயங்குவதற்குத் தேவையான என்ஸைம் எனும் மருத்துவ வேதிப் பொருட்கள் துத்தநாகச்சத்தை அடிப்படையாகக்கொண்டுதான் இயங்குகின்றன. 

இதனால்தான் சீரான வளர்ச்சி பெறுவதுடன், உடல் ஊனம் மற்றும் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் வராமல்  காப்பதற்குத் துத்தநாகச்சத்து உதவுகிறது. அந்த துத்தநாகம் அவரையில் மிகுந்து உள்ளது. இறுதியாகச் சொல்ல வேண்டும்  என்றால் ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்குத் தேவையான 15% சத்தினை பெறலாம் என்பது ஆய்வுகளின் முடிவு. ஒரு கப் அவரையில் 36 கிராம் நார்ச்சத்து உள்ளது எனத் தெரிய வருகிறது. இந்த நார்ச்சத்து  உறுப்புகளைச் சீராக இயங்க வைக்க உதவுகிறது. 

இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதோடு, உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு நாளடைவில் புற்று நோயாக  உருவாகும் மாசுக்கள் உடலில் தங்காத வண்ணம் வெளியேற்ற உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கே உரித்தான  மலச்சிக்கல் தீரவும் அவரை அருமருந்தாகிறது.அவரையில் பொதித்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து  உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. இது உடலில் சேர்ந்த கொழுப்புச்சத்தை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால்  இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகிறது.

Share on Google Plus

About Murasu Health

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment